![ADMK Member who leased government land; Collector who took action!](http://image.nakkheeran.in/cdn/farfuture/b5SoaYpleGrFB_aa_k2nszri8kQ7I1FpZrULPiCizvI/1633415113/sites/default/files/inline-images/th-1_1947.jpg)
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டாரத்தில் இருக்கும் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில், தேனி கலெக்டர் குடியிருப்பு உள்பட பல்வேறு துறையின் அலுவலகங்கள் மற்றும் ஆயுதப்படை மைதானம் ஆகியவை இருந்துவருகிறது. இந்தப் பகுதிகளில சர்வே எண் 814, 2184, 2201, 1046, 1051 ஆகிய புல எண்களுக்குக் கட்டுப்பட்ட நிலங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்களை முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான அதிமுக பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் ஒருவர் மோசடியாகத் தனது பெயரில் மாற்றியிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தன் பெயரில் மட்டுமின்றி தனது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் பெயரிலும் மாற்றியிருக்கிறார். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அவர்களின் பினாமி பெயரிலும் பட்டா மாற்றம் செய்து கூட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.
குறிப்பாகப் பெரியகுளம் முன்னாள் கோட்டாட்சியராக இருந்த ஜெயப்பிரியா, ஆனந்தி, தற்போது வட்டாட்சியராக இருக்கும் கிருஷ்ணகுமார், ஏற்கனவே இருந்த வட்டாட்சியர்கள் இரத்தினத்தாலா, மோகராம், தென்கரை உள்வட்ட நில அளவர் பிச்சைமணி உள்பட சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி மோசடியாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்ட இடங்களைத் தற்போது வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனைகளாகப் பிரித்து படுஜோராக விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்துவந்தது.
![ADMK Member who leased government land; Collector who took action!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ti23zwFsAA-8SQf69K5olG5UskwPTBMv5sg0YZKZGDo/1633415184/sites/default/files/inline-images/Collector-Muralitharan.jpg)
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட சில பொதுமக்களும் புகார் செய்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஒரு சிறப்பு ஆய்வுக் குழு அமைத்து, இந்தப் புகார்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசு விதிகளுக்கு மாறாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது. அதை தொடர்ந்து பட்டா வழங்கப்பட்ட காலக்கட்டங்களில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளின் பட்டியலை ஆட்சியர் சேகரித்தார். அதன்படி சம்பவம் தொடர்பாக தற்போதைய பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், போடி தாசில்தார் ரத்னபாலா, போடி துணை தாசில்தார் மோகன்ராம், ஆண்டிபட்டி துணை தாசில்தார் சஞ்சீவ் காந்தி ஆகிய 4 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.