பழனி முருகன் கோவிலில் ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று பழனிக்கு விசிட் அடித்து கோவில் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை செய்து வருகிறார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் இருந்து வருகிறது. இந்த பழனிமலையில் உள்ள மூலஸ்தானத்தில் பல்வேறு மூலிகைகள் அடங்கிய பழமையான நவபாசன முருகன் சிலைதான் மூலவர் சன்னிதானத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இந்த சிலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு போகர் என்னும் சித்தரால் உருவாக்கப்பட்டது. அதோடு மருத்துவ குணம் நிறைந்த இந்த சிலை சேதமடைந்து இருப்பதாக கூறி, மாற்று சிலை வைப்பதற்காக கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்து. அதன் அடிப்படையில் இருநூறு கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன புதிய சிலை தயாரிக்கப்பட்டு அதை பழனி மலையில் உள்ள மூலவர் சிலை முன்பாக அந்த சிலையை வைக்கப்பட்டது. இந்த புதிய சிலைக்கும், எப்பொழுதும் போல் நவபாசன சிலைக்கு ஆறுகால செய்வது போலவே இந்த ஐம்பொன் சிலைக்கும் செய்து வந்தனர். ஆனால் ஒரே கருவறையில் இரண்டு மூலவர் இருக்கக்கூடாது அதை உடனே அகற்ற வேண்டும் எனக் கூறி பக்தர்கள் போராடியதின் பேரில் 2004 ஜீன் 6ம் தேதி அந்த ஐம்பொன் சிலை அகற்றப்பட்டது.
அதன்பின் மீண்டும் நவபாசனத்தால் ஆன முருகன் சிலைக்கு வழக்கம்போல் ஆறுகால பூஜை நடைபெற்றது. இந்த நிலையில்தான் விலைமதிப்பிலாத நவபாசன சிலையை சிலர் வெளிநாட்டுக்கு கடத்தி விற்க முயற்சி செய்வதாகவும் ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து ஏற்கனவே செய்யப்பட்ட ஐம்பொன் சிலையை ஆய்வு செய்த போது மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அப்போதைய பழனி கோவில் முன்னாள் இணை ஆணையராக இருந்த ராஜா, ஸ்தபதி முத்தையா ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு கருணாகரன், இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் நேற்று காலையில் பழனிக்கு வந்தனர். அதைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேலும் விசாரணைக்காக பழனிக்கு வந்தவர் அங்குள்ள பாலாறு, பொருந்தலாறு விடுதியில் தங்கினார். அதைத் தொடர்ந்து தான் நேற்று காலை 9 மணிக்கு கோவில் நிர்வாக இணை ஆணையரான செல்வராஜ், மேனேஜர் உமா உள்பட சில அதிகாரிகளை பாலாறு, பொருந்தலாறு இல்லத்திற்கு வரச்சொல்லி மாலை ஆறரை மணிவரை தொடர்ந்து விசாரணை செய்தார்.
இந்த விசாரணையில் 2004லிருந்து தற்போது வரை உள்ள பணிபுரிந்த அதிகாரிகளின் பெயர் விவரங்கள் முறைகேடாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலைக்கு எங்கெங்கு உதிரிபாகங்கள் வாங்கினார்கள் என்ற விவரங்களையெல்லாம் கேட்டறிந்து அந்த ரிக்கார்டுகளை எல்லாம் ஆய்வு செய்து குறிப்பு எடுத்துக்கொண்டார். அதோடு 2004 முதல் 2018 வரை முருகனுக்கு எந்தெந்த பக்தர்கள் நன்கொடை மற்றும் தங்கம், வெள்ளி வழங்கிய விவரங்களையும் கேட்டறிந்து தீவிர விசாரணை நடத்தியதை கண்டு அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
அப்பொழுது அங்கு வந்த ஒருவர் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடம் 1984 பெரியநாயகியம்மன் கோவிலுக்கு உற்சவர் சிலை கொடுத்தேன். அது இருக்கறிதா? இல்லையா? என்று எனக்கு மர்மமாக இருக்கிறது ஆகவே தாங்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதை தொடர்ந்து இரவு ஏழு மணியளவில் பழனி நகரின் மையப்பகுதியில் பெரியநாயகிம்மன் கோவிலுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். அப்போது அந்த கோவில் வளாகத்தில் உள்ள வாகனங்கள் மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை ஐ.ஜி. ஆய்வு செய்தார். அதன்பின் பொருள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் ஐ.ஜி. சென்று அங்குள்ள உற்சவர் சிலை முதல் மற்ற அனைத்து வெண்கல சிலைகளையும் ஆய்வு செய்துவிட்டு கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சிலை சிற்பங்களையும் பார்வையிட்டு என்னென்ன சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை கேட்டறிந்து சேதமான சிலைகளின் விவரங்களையும் கேட்டறிந்துவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்தார்.
அப்போது ஐ.ஜி.பொன்மாணிக்கவேலிடம் கேட்டபோது... பெரியநாயகியம்மன் கோவிலில் வாகன அறையில் வைக்கப்பட்டுள்ள சிலை குறித்து புகார் வந்ததின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் புகாரில் தெரிவிக்கப்பட்டதுபோல் எவ்வித தவறும் அங்கு நடக்கவில்லை. தற்போது நடைபெற்ற வந்து பழனி முருகனின் ஐம்பொன் சிலையில் மோசடி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் 2004லிருந்து தற்போது வரை உள்ள கோவில் அதிகாரிகள் அனைவரையும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள். குற்றம் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைப்பது கூட உறுதி. அதோடு இந்த விசாரணைக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் கடுமையாக எடுக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் பாலாறு, பொருந்தலாறு விடுதிக்கே சென்று பழனி கோவில் நிர்வாகிகளிடம் தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல். இதனால் கோவிலில் பணிபுரியும் மேல் அதிகாரியிலிருந்து கீழ்மட்ட ஊழியர்கள் வரை ஐ.ஜி. விசாரணையைக் கண்டு அரண்டு போய் வருகிறார்கள்!