ஆன்லைன் விளையாட்டு யூடியூப் சேனலில் ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டது தொடர்பான புகாரில் பப்ஜி மதனை காவல்துறையினர் தொடர்ந்து தேடிவரும் நிலையில், அவரது மனைவியும், யூடியூப் சேனலின் நிர்வாகியுமான கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, கிருத்திகாவை நீதிமன்றக் காவலில் ஜூன் 30ஆம் தேதிவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், கிருத்திகாவை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்தப் புகாரில் அடுத்த நடவடிக்கையாக யூடியூபில் ஆபாசமாகப் பேசி சம்பாதித்த மதனின் வங்கிக் கணக்குகள், முதலீடுகள் குறித்து போலீசார் ஆய்வு நடத்திவருகின்றனர். மேலும், பப்ஜி மதனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசிடம் மதன் சரணடைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ''தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை தீவிரமாக தேடிவருகிறோம். சமூக வலைதள குற்றங்களைக் கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் சட்டரீதியாகவே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என தெரிவித்துள்ளார்.