தன்னிடம் மரியாதைக் குறைவாக பேசிய எஸ்.ஐயின் மூக்கை உடைத்துள்ளார் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் தமிழ்நாடு மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சிவசங்கர பாண்டியன். விளாத்திக்குளம் முதலியார் தெருவில் வசிக்கும் இவர் வியாழனன்று முகக்கவசம் அணியாமல் விளாத்திக்குளம் கடைத்தெருவில் இரு சக்கர வாகனத்தில் அலைந்து திரியவே இவரை நிறுத்தி, "ஏன்.? முகக்கவசம் அணியவில்லையென" காவல் பணியில் இருந்த போலீஸ் நணபர்கள் குழுவினை சேர்ந்த வேலுச்சாமி மற்றும் அருண்குமார் ஆகியோர் கண்டித்திருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த மின்வாரிய ஊழியர் பதிலுக்குச் சண்டையிட, அங்கு ஏற்கனவே காவல் பணியிலிருந்த முன்னாள் ரானுவ வீரரும் முகக்கவசம் அணியாததற்குக் கண்டித்துள்ளார். அவருடனும் சண்டை பிடித்த மின்வாரிய ஊழியர் கோபமாகவும், மரியாதையில்லாமல் பேசி விட்டு அங்கிருந்து தனது இல்லத்திற்குப் புறப்பட்டுள்ளார்.
சம்பவத்தினால் வேதனையடைந்த முன்னாள் ரானுவவீரரும், போலீஸ் நண்பர்கள் குழுவும் விளாத்திக்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளையிடம் முறையிட்ட வேளையில், அவரும் நடந்த சம்பவத்தினை விசாரித்து வருமாறு எஸ்.ஐ.ராமச்சந்திரனை பணித்திருக்கின்றார், எஸ்.ஐயும் மின்வாரிய ஊழியரைத் தேடி முதலியார் தெருவிற்குச் சென்று, தன்னுடைய புல்லட்டில் அமர்ந்து கொண்டே அங்கு நின்று கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் சிவசங்கரபாண்டியனை அழைத்து மரியாதை குறைவாக விசாரித்ததாகத் தெரிகின்றது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த மின்வாரிய ஊழியர் புல்லட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த எஸ்.ஐ.யின், மூக்கில் குத்தவே, மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பதட்டமடைந்த எஸ்.ஐ.ராமச்சந்திரன் அங்கிருந்து வெளியேறி, விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பியுள்ளார். எஸ்.ஐ.யிடம் புகார் பெற்று துறை ரீதியான நடவடிக்கைக்குக் காத்திருக்கின்றனர் போலீசார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.