தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, 2019 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பனங்காட்டு படை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
![thoothukudi district mayor women's quota chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/ANZG94ZnPikO7eeNiMKziwpCaiKNSV5v1LTi3LArLLU/1579747972/sites/default/files/inline-images/CHC1_40.jpg)
அந்த மனுவில், 2008-ம் ஆண்டு உதயமான தூத்துக்குடி நகராட்சியின் மேயர் பதவி, பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின்படி, தொடர்ந்து இரு முறை, அதாவது 10 ஆண்டுகள் இந்த இடஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும் எனவும், அந்த ஒதுக்கீட்டு காலம் 2021 வரை உள்ள நிலையில் திடீரென மேயர் பதவியை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
![thoothukudi district mayor women's quota chennai high court](http://image.nakkheeran.in/cdn/farfuture/gyXkB1GjaArw4Xg68-ESEl2VDVG6EvkfUhG6eYnyZ1w/1579747984/sites/default/files/inline-images/thoothukudi5.jpg)
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில், ஏழு வார்டுகள் மட்டுமே பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், பொதுப்பிரிவினருக்கே மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் எனவும், பட்டியலினத்தவத்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு பிப்ரவரி 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.