அணைகள் பாதுகாப்பு மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்தியில் ஆளும் பாஜக அரசு அணைகள் பாதுகாப்பு மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்கு அமைச்சரவையில் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமானால் இந்தியாவில் உள்ள அணைகள் யாவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இது அப்பட்டமான மாநில உரிமைகள் பறிப்பாகும். எனவே, இந்த மசோதாவை திரும்ப பெறுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இந்தியாவில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய அணைகள் உள்ளன, பல்லாயிரக்கணக்கில் சிறிய மற்றும் நடுத்தர அணைகள் உள்ளன. இந்த அணைகள் யாவும் மாநில அரசுகளால் கட்டப்பட்டு பராமரிக்கப்படுபவையாகும். அணைகளை மத்திய அரசு பாதுகாக்கும் என்று ஆக்குவதன் மூலம் மாநில பட்டியலில் உள்ள அதிகாரத்தை மத்திய அரசின் பட்டியலுக்கு கொண்டு செல்ல மோடி அரசு முயற்சிக்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட மாநில அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து மத்தியில் குவித்து வருகிறார்கள். கல்வி, உள்ளிட்ட அதிகாரங்கள் அப்படித்தான் பறிக்கப்பட்டன. நீர் ஆதார அதிகாரத்தையும் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு இப்போது முயற்சிக்கிறது.
மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில் பாஜக அரசின் இந்த முயற்சியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
அணை பாதுகாப்பு மசோதா சட்டமாக்கப்பட்டால் அதனால் அதிகம் பாதிக்கப்படுகிற மாநிலமாகத் தமிழ்நாடு தான் இருக்கும். தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லை பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன. அவற்றை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் கேடாகவே முடியும். அதுமட்டுமின்றி இப்போது உருவாக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளையும் இது முடக்கி விடும்.
மாநிலப் பட்டியலுள்ள எந்த ஒரு அதிகாரத்தையும் பொதுப் பட்டியலுக்கு நேரடியாகவோ மறைமுகமாவோ மாற்றுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் பலவற்றை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென சர்க்காரியா கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரைகளை நடைமுறைபடுத்துமாறு குரல் எழுப்புவதற்கு இதுவே சரியான தருணம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.