Skip to main content

ரஷ்யாவில் உயிரிழந்த திட்டக்குடி மருத்துவ மாணவர் உடலை கொண்டுவர பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை! 

Published on 10/08/2020 | Edited on 10/08/2020

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமு (54). துபாயில் வேலை பார்த்து வரும் இவருக்கு அமுதா என்ற  மனைவியும், விக்னேஷ் என்ற மகனும், தனலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். தனலட்சுமி மருத்துவம் சார்ந்த படிப்பு படித்து வருகிறார். விக்னேஷ் (23) கடந்த 5 வருடங்களாக ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். மருத்துவ படிப்பு முடிக்க இன்னும் 6 மாதங்களே உள்ளன. கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக விமான வசதி இல்லாத காரணத்தால் ரஷ்யாவில்  தங்கியுள்ளார்.

 

இந்நிலையில் ரஷ்யாவில் விக்னேஷ் தனது நண்பர்களுடன் கடல் பகுதிக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நண்பர்களை காப்பாற்ற முயன்ற போது கடல் அலையில் சிக்கி விக்னேஷ் இறந்துவிட்டார். ரஷ்யா மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இதுகுறித்து அவரின் பெற்றோருக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். 

 

விக்னேஷ் இறந்த சம்பவம் குறித்து கேட்டதும் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் கதறி அழுதனர். அவர்கள் கதறி அழும் காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. மேலும் அவரது பெற்றோர்கள் விக்னேஷ் உடலை சொந்த ஊரான திட்டக்குடிக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்