திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலியப்பட்டு கிராமத்தில் சிப்காட் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்ட தகவல் தெரிந்து, ‘விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. இந்த இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டும்’ என பாலியப்பட்டு, புனல்காடு உட்பட சில கிராம மக்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றனர். 125வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது.
ஏப்ரல் 24ம் தேதி தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. பாலியப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்கள், “124 நாட்களாக போராட்டம் நடத்திவருகிறோம். ஒரு வி.ஏ.ஓ கூட வந்து பார்க்கவில்லை. பாலியப்பட்டு கிராமத்துக்கு சிப்காட் வருகிறது, விவசாய நிலங்களை எல்லாம் எடுக்கப்போகிறார்கள், வீடுகளை காலி செய்யச்சொல்கிறார்கள் என்கிற தகவல் பரவியதும் பாலியப்பட்டு கிராமத்திலுள்ள இளைஞர்களுக்கு அக்கம்பக்க கிராமத்தினர் பெண் தரமறுக்கிறார்கள், நிச்சயம் வரை சென்ற திருமணம் நின்றுள்ளது. ஊரையே காலிபண்ணப்போறாங்க, இவுங்களுக்கு கடன் கொடுத்தால் எப்படி திருப்பி வாங்கறது என கடன் தரவும் மக்கள் யோசிக்கிறார்கள். நாம் எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளோம், அதனால் கிராமசபை கூட்டத்தின் மூலமாக, மக்கள் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம், இந்த பகுதியில் சிப்காட் தேவையில்லை என தீர்மானம் இயற்றுங்கள், ஏற்கனவே ஒரு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது, மீண்டும் இப்போதும் தீர்மானம் இயற்ற வேண்டும்” என மக்கள் சார்பாக சம்பத் என்பவர் கோரிக்கை விடுத்தார்.
கிராமசபை கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கூட்டத்தில் கலந்துகொண்ட மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரின் உடலுக்குள் காளிம்மாள் என்கிற சுவாமி புகுந்ததாகச்சொல்லி திடீரென சாமியாடினார். எனக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்ங்க. நான் சிப்காட் வராமல் தடுக்குறேன் என்றார். பின்னர் அவருக்கு திருநீறு போட்டு அவரை சாந்தப்படுத்தினர்.
சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை அரசாங்கம் எடுக்கவுள்ளது என்கிற தகவலால் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயம் செய்யும் இளைஞருக்கு, திருமணத்துக்கு பெண் தரமறுக்கிறார்கள், கடன் தரமறுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.