மனித உயிர்களுக்குச் சவாலாக உள்ள கரோனா வைரஸ் நாளுக்கு நாள் தனது கோரப்பசியை நடத்தி வருகிறது. இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் வெளிநாட்டவர்களின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அவர்களைத் திருவண்ணாமலையிலிருந்து அனுப்பி வைக்கும் நடவடிக்கையை ஊரடங்கு தொடங்கிய ஆரம்பத்திலேயே தொடங்கினார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி. தொடர்ந்து திருவண்ணாமலையில் சுற்றுலாப் பயணிகளை வெளிநாட்டவர் அல்லது வெளி மாவட்ட பக்தர்கள் இல்லாமல் அனைவரையும் நகரத்திலிருந்து காவல்துறையினர் வெளியேற்றினர்.
இந்த நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை மலை உச்சியில் சிலர் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தெரியவர அதன்பேரில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். அப்போது இருவர் மலையில் இருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தலைமையில் காவல்துறையினர் மலைமீது ஏறினார்கள். பிறகு அங்கு இரண்டு பேர் இருப்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை செய்தார்கள். அவர்கள் இருவரும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் எனத் தெரியவந்தது.
இருவரும் தியானம் செய்வதற்காக மலைமீது வந்ததாகக் கூறினார்கள். அவர்களிடம் காவல்துறையினர் இப்போது ஊரடங்கு அமலில் உள்ளது மேலும் கரோனா வைரஸ் பரவலாக இருப்பதால் தியானம் செய்ய மட்டுமல்ல, பல காரியங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நீங்கள் வெளியேறுங்கள் என அவர்களை மலையிலிருந்து கீழே இறங்கி கொண்டு வந்து அவர்களுக்கு உணவு கொடுத்து பிறகு தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு அவர்கள் திருவண்ணாமலையிலிருந்து அனுப்பப்படுகிறார்கள். எந்த நேரமும் கரோனா வைரஸ் பற்றி பீதியில் உறைந்து கிடக்கும் நேரத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு தியானம் இந்த நிலையிலும் தேவைப்பட்டிருக்கிறது. இதுவும் ஒரு வித்தியாசமானதுதான்.