கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாத மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட மக்களுக்கு, காவல்துறையினர் கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க வைத்து நூதன தண்டனை அளித்தனர்.
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளைக் காட்டிலும், மாநகர பகுதிகளில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஏப். 25 முதல் 28ம் தேதி வரை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அத்தியாவசிய தேவைகளின்றி எக்காரணம் கொண்டும் பொதுவெளியில் நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தவிர்க்க முடியாத சூழல்களில் பொதுவெளியில் நடமாட நேர்ந்தால், கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத மேம்பாலத்தில் பொதுமக்கள் பலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உதவி ஆணையர் அண்ணாத்துரை தலைமையில் காவலர்கள் மேம்பால பகுதிக்கு விரைந்தனர்.
மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த மக்களை அழைத்த காவல்துறையினர், ''144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடவோ, தேவையின்றி நடமாடவோ கூடாது. இதனால் இனி வீட்டை விட்டு வெளியில் வர மாட்டேன். கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முயற்சிகள் எடுப்பேன்,'' என்று அவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து, நூதன முறையில் தண்டனை அளித்தனர்.
உறுதிமொழி எடுத்த பின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அந்த மேம்பாலத்தில் நடைப்பயிற்சி செல்ல முடியாதவாறு தடுப்புக்கட்டைகள் வைத்து மூடினர். அதேபோல், தேவையின்றி வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ததோடு, கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பரப்புரைகளையும் செய்தனர்.