கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கில் இறக்கின்றனர். தமிழ்நாட்டில் தினமும் சுமார் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்படும் நிலையில் 300க்கும் அதிகமானோர் தினசரி இறக்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கை அறிவித்து செயல்படுத்திக்கொண்டுள்ளது தமிழக அரசு.
முழு ஊரடங்கு இருப்பதால் சாலையோர வியாபாரிகள், சிறு வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மாட்டு வண்டி தொழிலாளர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் போன்றோரும் உணவில்லாமல் தவிக்கின்றனர். அதேபோல் சாலைகளில் துப்புரவு பணி மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்கள் சிறிய உணவு விடுதிகள் கூட இல்லாததால் சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர்.
கரோனா நிவாரண பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என திமுகவினருக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று சில இடங்களில் திமுக நிர்வாகிகள் உணவுப் பொருட்கள் வழங்குவது, உணவு வழங்குவது என களமிறங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரைச் சேர்ந்த, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், தினமும் உணவு இல்லாதோருக்கு உணவு வழங்கும் பணியினை தொடங்கியுள்ளார். தினசரி 200க்கும் அதிகமானவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்குகிறார். இந்தப் பணி தொடர்ச்சியாக நடைபெற கட்சியினர் சிலரிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்கள் மூலமாக நகரத்தின் அனைத்துப் பகுதிக்கும் சென்று உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு மூன்றுவேளை உணவு வழங்கச் சொல்ல, அதன்படி செயல்படுத்த துவங்கியுள்ளனர். திருவண்ணாமலை நகரிலும் சில இடங்களில் திமுக இளைஞர்கள் சிலர் உணவு வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.