கடலூரில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தம்புராஜ் தலைமை தாங்கினார். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், எஸ்.பி ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் சரண்யா, மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டு 354 மாணவ மாணவிகளுக்கு ரூ 12 கோடியே 35 லட்சம் கல்வி கடன்களை வழங்கினார்கள். அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வங்கியாளர்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் சுணக்கம் காட்டக்கூடாது. கடனை திருப்பி செலுத்துவோருக்கு கடன் வழங்கலாம். மாணவர்கள் எளிதில் கல்வி கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
அமைச்சர் சி.வெ கணேசன் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வங்கிகள் முன் வர வேண்டும். வங்கியின் நெறிமுறைகளை கடைப்பிடித்து எந்த அளவுக்கு மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க முடியுமோ அந்த அளவுக்கு வழங்க வேண்டும். மாணவர்கள் கல்வி கடன் பெற்றோர் பெற்றதோடு இருந்து விடக்கூடாது. படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். குடும்ப சுமைகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது. அவர்களை சுதந்திரமாக படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தபடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ 3 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் கட்டப்பட்டு இருந்தது இதனை இரு அமைச்சர்களும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் தேசியக் கொடியை அமைச்சர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கௌரி சங்கர், திமுக மாநகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம் உள்ளிட்ட கட்சியினர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.