சேலத்தில் வீட்டுவசதி வாரியத்தில் வாங்கிய வீட்டுக்கான பத்திரத்தை வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஊழியரை போலீசார் கைது இன்று (ஆகஸ்ட் 28, 2018) செய்தனர்.
சேலம் அய்யந்திருமாளிகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் துரைசாமி என்பவர், கடந்த 1995ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கியிருந்தார். இதற்கான தவணைத்தொகை முழுவதையும் செலுத்திவிட்ட துரைசாமி வீட்டுப் பத்திரம் வழங்குமாறு விண்ணப்பித்து இருந்தார். அவருடைய மனுவை பரிசீலித்த வீட்டுவசதி வாரிய அலுவலக எழுத்தர் தனசேகரன், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக பத்திரம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனக்கூறினார்.
தவணை எல்லாம் முறையாக செலுத்திய பின்னரும் பத்திரத்தை வழங்க லஞ்சம் கேட்டதால் மனம் உடைந்த துரைசாமி இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அலோசனையின்பேரில் ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளுடன் இன்று மதியம் வீட்டுவசதி வாரிய அலுவலகத்திற்குச் சென்ற துரைசாமி, அங்கே இருந்த தனசேகரனிடம் கொடுத்தார்.
அந்தப் பணத்தை பெற்றுக்கொண்டபோது, முன்பே அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சத் தொகையை பறிமுதல் செய்தனர். லஞ்சத்தில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.