
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது நகரும் வேகம் 10 கி.மீ. இல் இருந்து 9 கி.மீ. ஆகக் குறைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதே சமயம் கனமழை காரணமாகக் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (29.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனவே இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் இன்று (29.11.2024) வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் (29.11.2024), நாளையும் (30.11.2024) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று (29.11.2024) டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு நாளை (30.11.2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.