போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி சம்பள உயர்வு சரியானது தான் என உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
2.57 காரணி ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதம் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அந்த நேரத்தில், தொடர்ந்து தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசுப் பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தது. ஏறத்தாழ 8 நாட்கள் நடந்த அந்த போராட்டத்திற்கு தீர்வு கொண்டுவரும் வகையில், போக்குவரத்து தொழிலாளர் விவகாரத்தில், அரசு, தொழிலாளர் இடையே மத்தியஸ்தம் செய்ய நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. இதைதொடர்ந்து, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், தமிழக அரசு, போக்குவரத்து சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி சம்பள உயர்வு சரியானது தான் என உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
இதனை ஏற்று கொண்ட உயர்நீதிமன்றம், அறிக்கையை அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.