சென்னையில் இருந்து 7 வாகனங்களில் 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (29.11.2024) வந்திருந்தனர். இவர்களுடன் சி.ஆர்.பி.எப். போலீசாரும் உடன் வந்திருந்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை சார்லஸ் நகரில் உள்ள பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் முருகானந்தம் வீட்டிலும், கருக்காக்கோட்டையில் உள்ள அவரது சகோதரரும் அதிமுக நிர்வாகியுமான பழனிவேல் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதோடு ஆலங்குடியில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் மற்றொரு பழனிவேல் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் 2 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக முருகானந்தம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அவரது சகோதரர் பழனிவேலுடன் சேர்ந்து ஊரக வளர்ச்சித் துறையில் எல்.இ.டி பல்புகளை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம், பிளீச்சிங் வழங்குவதற்கான ஒப்பந்தம் எடுத்திருந்தனர்.
இது தொடர்பாகத் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்தனர். அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் அமலாக்கத்துறையினர் திடிரெனெ சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலை 7 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த சோதனையானது 5 இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.