Skip to main content

“சொத்து வரி உயர்வுக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி” - அமைச்சர் கே.என். நேரு 

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
EPs the reason for the increase in property tax Minister KN Nehru

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நேற்று (28.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை மற்றும் சேலை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தலையில் முக்காடு போட்டும் அமளியில் ஈடுபட்டனர். அதே சமயம் சொத்து வரி விதிப்பு தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடுமையான வரி உயர்வுகளைப் பொதுமக்கள் தலையில் சுமத்தும் திமுக அரசைக் கண்டித்து மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்க மறுத்த திமுக மேயர், அனைத்து தீர்மானங்களையும் ஜனநாயக விரோதமாக நிறைவேற்றிக் கூட்டத்தை முடித்திருப்பது கண்டனத்திற்குரியது. திருப்பூர் மாநகராட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து ஜனநாயக முறையில் அதிமுக கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தை காவல்துறையை ஏவி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயர்த்தப்பட்ட வரிகளைத் திரும்பப் பெறவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டு சொத்து வரி உயர்வுக்குக் காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரி திருத்த தீர்மானத்திற்கு எதிராய் அதிமுக போராட்ட நாடகத்தை நடத்தி உள்ளது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியினை ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது வாய் மூடி அமைதியாய் இருந்த பழனிச்சாமி இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ‘ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும்’ என நிபந்தனைகளை விதித்துள்ளது. அதேபோல மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா திட்டம்’ மற்றும் அம்ரூட் 2.0 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

EPs the reason for the increase in property tax Minister KN Nehru

ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைப்பிடிக்காத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்குக் கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அமரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மத்திய அரசு இப்படி கடுமையான விதிகளை 15வது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது அவர்களோடு நட்புறவில் இருந்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது போல உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து உள்ளாட்சி அமைப்புகளை எல்லாம் திவாலாக்கிய எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயத்திற்காகவும் தங்கள் கட்சியின் கலவர ஆய்வுக் களேபரங்களை மறைத்து திசை திருப்பவும் மக்கள் மீது அக்கறை உள்ளதைப் போல நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார். 15வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியதன் காரணமாக வேறுவழியின்றி, தமிழ்நாட்டு மக்கள் மீது மாறா அன்பும் அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் மிக மிகக் குறைந்த அளவு சொத்து வரியினை உயர்த்த உத்தரவிட்டார். அந்த வகையில் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாகப் பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரியானது மிக மிகக் குறைந்தளவே விதிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்