
புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளேட் ,கப் என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் மார்ச் 01-ஆம் தேதி முதல் தடை செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அவற்றிற்கான மாற்று பொருட்கள் பயன்பாட்டுக்கு விடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எனவே மார்ச் 01-க்குள் மாற்று ஏற்பாடுகளை வணிகர்கள் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் அரசு சார்பு நிறுவனமான பாசிக் பாப்ஸ்கோ பிராந்தி கடைகளை தனியாருக்கு ஏலத்தில் விடலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இருளர் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
இதனிடையே நேற்று சனிக்கிழமை நாராயணசாமி அளித்த பேட்டியில்
மாநில மக்களின் உரிமைகளை தடுக்க கிரண்பேடி நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும், புதுச்சேரி மக்கள் பொங்கியெழுந்தால் கிரண்பேடி இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதற்கு கிரண்பேடி சவால் விடுத்துள்ளார். ‘என்னை பயமுறுத்தும் செயலில் முதலமைச்சர் நாராயணசாமி ஈடுபட வேண்டாம்’ என கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.