தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது நகரும் வேகம் 10 கி.மீ. இல் இருந்து 9 கி.மீ. ஆகக் குறைந்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாகக் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (29.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கனமழை எச்சரிக்கை காரணமாகச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழக மற்றும் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் இன்று (29.11.2024) வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இன்று (29.11.2024) காலை 10 மணிக்குள் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.