திமுக பொதுக்கூட்டத்தில், கோஷ்டி பூசல் காரணமாக நிர்வாகிகளுக்கிடையே நடந்த மோதலால் திமுக நிர்வாகி கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஏனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றது. வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மக்களவைத் தொகுதியில் ஆங்காங்கே பொதுக்கூட்டத்தினை நடத்தி வருகின்றார் வெற்றிப் பெற்ற நவாஸ்கனி. இதனின் ஒரு பகுதியாக உச்சிப்புளியில் நேற்று மதிய வேளையில் கூட்டம் நடைபெற, அதில் கலந்துக் கொண்ட ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகுவிற்கும், பொதுக்குழு உறுப்பினரான வழுதூர் ராஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கைகலப்பு நடந்து நிர்வாகிகளின் கண்டிப்பால் அப்போதைக்கு பிரச்சனை முடிவிற்கு வந்தது.
அதற்கடுத்து இரவினில் சாத்தான்குளத்தில் நடந்த நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்தில் மீண்டும் இருதரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட ராஜாவின் ஆதரவாளர்களால் இன்பா ரகு கத்தியால் குத்தப்பட்டதில் அதிகளவில் ரத்தம் வெளியாக அவசரம் அவசரமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இன்பாரகுவிடம் புகாரைப் பெற்ற காவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.