பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
'நிவர்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. குறிப்பாக சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, மதுராந்தகம் உள்பட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டுவதால், ஏரியில் இருந்து இன்று (27/11/2020) மாலை 05.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு 35 அடியாக உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், இன்று மாலை முதல் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே, கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.