அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அத்துடன், கட்சியின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கி அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். மேலும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
நாளை தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் கூடுகிறது. இந்நிலையில் அதிமுக தொடர்பாக எந்த முடிவை எடுத்தாலும் தம்மிடம் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கோரி சபாநாயகர் அப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி சார்பாக சட்டப்பேரவை செயலாளருக்குக் கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அதில் 'அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் ஆர்.பி.உதயகுமாரை சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த கடிதத்தை அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்திருந்தார்.
இந்தநிலையில் அதிமுக எம்.ஏ.ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.