முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவினர் ஓர் ஆண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் சர்வதேச கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இன்று காலை 4 மணியளவில் மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.
4 பிரிவுகளில் (5 கி.மீ, 10 கி.மீ, 21 கி.மீ, 42 கி.மீ) நடந்த இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ்களும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார். மேலும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் உதயநிதி, நேரு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ள கலைஞர் நூற்றாண்டில் பன்னாட்டு மாரத்தான் போட்டியை நடத்திக் காட்டியுள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியன். கின்னஸ் சாதனை மாரத்தானாக மட்டுமல்ல, முதன்முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநர்களும் பங்கேற்ற வகையில், சமூகநீதி மாரத்தானாகவும் இது திகழ்ந்து கலைஞருக்குச் சிறப்பு சேர்த்துள்ளது. எண்ணிக்கையோடு எண்ணத்திலும் உயர்ந்து கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் அமைந்துள்ளது. உடலுறுதியையும் உள்ளவுறுதியையும் வளர்க்கும் இத்தகைய விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இளைஞர்களும் பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் இவற்றில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.