சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 63). இவருக்கு அமுலு என்ற மனைவி உள்ளார். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு அமுலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்து ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முனிரத்தினத்திற்கு தனலட்சுமி மற்றும் பாக்கியலட்சுமி என்ற இரு தங்கைகள் உள்ளனர். வீட்டின் கீழ்தளத்தில் உள்ள இரு வீடுகளில் தனித்தனியாக முனிரத்தினமும் தனலட்சுமியும் வசித்து வருகின்றனர். வீட்டின் மேல்தளத்தில் மற்றொரு தங்கையான பாக்கியலட்சுமி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த முனிரத்தினத்தின் உடலில் தீப்பிடித்ததால் வலி பொறுக்க முடியாமல் அலறித் துடித்து கூச்சலிட்டுள்ளார். இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து முனிரத்தினத்தின் மீது பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அங்கு இருந்தவர்கள் இது குறித்து திருவிக நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனிரத்தினத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சொத்து தகராறு காரணமாக வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த தனது அண்ணன் முனிரத்தினத்தின் மீது அவரது தங்கை தனலட்சுமி பெட்ரோலை ஊற்றி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தனலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.