உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.
இதனிடையே தடுப்பூசி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்தது இந்திய அரசு. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி பக்கவாதம் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும், திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மூன்றாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.