திண்டுக்கல்லில் உள்ள பிரபல ஜி.டி. என் கல்லூரியில் சட்டக் கல்லூரி துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஜி.டி.என். கல்விக் குழும அறங்காவலரும் கம்பன் கழகத் தலைவருமான புதுக்கோட்டை ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஜி.டி.என் கல்விக் குழுமத் தலைவர் ரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு சட்டக் கல்லூரியைத் திறந்து வைத்தார். அதுபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாணவர் சேர்க்கையைத் துவங்கி வைத்தார். உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப் பாடநூல்களை மாணவ மாணவியருக்கு வழங்கினார்.
இதில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சந்தோஷ் குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் விசாகன், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, ஜி.டி.என் கல்லூரி நிர்வாக இயக்குநர் துரை.பாலசண்முகம் மற்றும் மாநகரத் துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ஜெயன் உள்பட அதிகாரிகளும் மாணவ மாணவிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “நான் 2006 -2007 வரை இரண்டு ஆண்டுகள் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தான் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. அப்போது தலைவர் கலைஞர்தான் வசிப்பதற்காக உருவாக்கிய வீட்டை அம்பேத்கர் சட்டக் கல்லூரியாக உருவாக்கிக் கொடுத்தார். நான் மதுரை சட்டக் கல்லூரியில் படித்தபோது இரண்டாம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது வெளியேற்றப்பட்டேன். ஆனால் என் வாழ்நாளில் ஒரே ஆசை, சட்டம் படித்து நீதிபதியாக வர வேண்டும் என்று நினைத்தேன். அது நடைபெறவில்லை. அரசியலுக்கு வந்து விட்டேன். நம் மாவட்டத்தைச் சேர்ந்த சோமசுந்தரம், வேல்முருகன், வேலுமணி, மஞ்சு ஆகியோர் நீதிபதிகளாக இருந்து வருகிறார்கள்.
வக்கீல் படிப்புக்கு படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. சட்டம் அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும். உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அரைமணி நேரம் வாதாடினாலே போதும் 30 லட்சம் நேர்மையான வழியில் வரக்கூடிய வருமானமாக இருக்கும். அரசு சட்டக் கல்லூரியில் மாணவ மாணவிகள் சேர வேண்டும் என்றால் 82% மார்க் இருந்தால்தான் போக முடியும். ஆனால் குறைந்த மார்க் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் ஜி.டி.என் சட்டக் கல்லூரி உதவியாக இருக்கும்" என்று கூறினார்.