தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூன் 24- ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக டிஆர்பி.ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். அரசுத்துறைகளின் செலவு, நிதிப்பயன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தலைமையில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, சேலம் மாவட்டத்திற்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) வந்துள்ளது. முதல் நாளான ஜூன் 7- ஆம் தேதி, சேலம் பள்ளப்பட்டி ஏரி, சீலநாயக்கன்பட்டி ஏரி, முத்துநாயக்கன்பட்டி, ஓமலூர், காமனேரி, மேச்சேரி, ஊ.மாரமங்கலம் ஆகிய பகுதிகளில் நடந்து வரும் அரசுத்திட்டப் பணிகளை மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, அருள், அன்பழகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எழிலரசன், செந்தில்குமார், பாலசுப்ரமணியன், முகமது ஷாநவாஸ், செல்லூர் ராஜூ ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில துறைகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தற்போது சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5.40 கோடி ரூபாயில் தளம் அமைத்தல், மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டனர்.
சூரமங்கலம் மண்டலம் பள்ளப்பட்டி ஏரியில் 12.80 கோடி ரூபாயில் ஏரிக்கரையில் கற்கள் பதித்தல், கம்பி வேலிகள் அமைத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள், கரையின் சுற்றுப் பகுதிகளில் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏரி புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சீலநாயக்கன்பட்டியில் மண் பரிசோதனை நிலையம், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், பிசி, எம்பிசி கல்லூரி மாணவர் விடுதி, சூரமங்கலம் & ஓமலூர் சாலை, மேக்னசைட் மற்றும் ஓமலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.
இதற்கிடையே, பல்வேறு திட்டங்களின் கீழ் 32 பயனாளிகளுக்கு 10.54 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கினர். 36 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 59 லட்சம் ரூபாய் கடனுதவியும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஆர்பி.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், சதாசிவம், டி.ஆர்.ஓ. ஆலின் சுனேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.