அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி 'எங்கே எனது வேலை?' என்ற முழக்கத்துடன் ஒசூர், சென்னை, வேதாரண்யம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து இளைஞர்களின் பிரச்சார விழிப்புணர்வு நடைப்பயணம் தொடங்கியது.
இந்த நடைப்பயணம் தமிழகத்தில் 44 மாவட்டங்களுக்கு சென்று நேரடியாக இளைஞர்களை சந்தித்து ஒன்றிய அரசு கொடுத்த தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதி குறித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று திருச்சியில் நிறைவு செய்யப்பட்டு புத்தூர் நான்கு சாலைப் பகுதியில் மாபெரும் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தேசியக் குழு உறுப்பினர்கள் பார்த்தின், ரமேஷ், அஸ்வினி, பவிதாரணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "ஒன்றிய அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 18 கோடி பேருக்கு அவர்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 18 ஆயிரம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கவில்லை. தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாமல் 90 கோடி இளைஞர்கள் உள்ளனர். அதில் 9 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதேபோல் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு இந்திய நாட்டு மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று கூறினார். இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் 15 ஆயிரம் ரூபாய் கூட அவர் வரவு வைக்கவில்லை.
ஒரு விவசாயி தன்னிடம் உள்ள விதை நெல்லை எந்த காரணத்திற்காகவும், விற்க முன் வரமாட்டார். ஆனால் பிரதமர் மோடி இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்து இந்திய நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார். இளைஞர்கள் கல்வி கற்பதற்காக வங்கிகள் கடன் கொடுத்து உதவ வேண்டும் என்று அன்று நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கூறியதோடு, அதற்காக எந்தவித ஆவணங்களும் தேவையில்லை. பெற்றோர்களின் கையெழுத்து ஒன்று போதும் என்று கூறினார். ஆனால் இன்று கல்விக் கடனை திருப்பி கேட்க அம்பானி, அதானி போன்ற நிறுவனங்களின் அடியாட்கள் மாணவர்களிடம் கடனை திருப்பி செலுத்த மிரட்டுகிறார்கள்.
பிரதமர் மோடி என்ன படித்திருக்கிறார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு எந்தவித பதில்களும் திருப்பி அனுப்பப்படாமல், அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை பார்த்து உங்களுக்கும், அதானிக்கும் என்ன உறவு உள்ளது என்பதை சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்காமல், ராகுல் காந்தி மீது குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு கடந்த மார்ச் 23 ஆம் தேதி நம்முடைய பிரச்சார பயணம் தொடங்கிய நாளில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் நீதிமன்றம் உடனே அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் அதற்குள் பிரதமர் மோடி அவருடைய எம்.பி பதவியை பறித்து, அவர் இருந்த அரசாங்க வீட்டையும் காலி செய்ய வைத்து ஒரு சர்வாதிகார போக்கை கையாண்டுள்ளார். அன்று ஹிட்லர் எப்படி ஒரு பாசிச ஆட்சியை நடத்தினாரோ அதேபோல் பிரதமர் மோடி ஒரு பாசிச ஆட்சியை நடத்துகிறார். ஹிட்லர் போரில் தோல்வி அடைந்தபோது எப்படி தன்னுடைய குழந்தைகளை விஷ ஊசி போட்டும், காதல் மனைவியை சுட்டுக் கொன்றும், தான் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்து கொண்டார். பாசிச ஆட்சி நடத்திய அவரின் நிலைமை, நாளை இந்தியாவில் பாசிச ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்து விடக்கூடாது" என்றார்.
முன்னதாக இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பகத்சிங் தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் 10 ஆயிரம் நிவாரணம் கொடு. ஒன்றிய மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களுக்கு ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்து, நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைத்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியமாக 21 ஆயிரம் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் திருமலை, மாநிலத் தலைவர் பத்மாவதி, அகில இந்திய துணைத் தலைவர் சுப்புராயன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.