![The thieves who went into the house ... The husband who was shocked to see his wife lying unconscious](http://image.nakkheeran.in/cdn/farfuture/H8HKj8DA9iuU4NSqyn6isYCKG-4vVqInnWLoBTAFjzY/1627887862/sites/default/files/inline-images/TRICHY-chain-snatching.jpg)
திருச்சி, சின்னக்டை வீதி பத்தாய் கடை தெருவைச் சேர்ந்தவர் சோனமுத்து (55), தங்க நகைகள் செய்யும் ஆசாரி. இவரது மனைவி அகிலா (47). நேற்றிரவு (01.08.2021) சோனமுத்து குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அகிலா தனது அறையின் கதவுகளைத் திறந்துவைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். சோனமுத்துவின் வீட்டின் அருகில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. புதிய கட்டடத்தின் வழியாக இன்று அதிகாலை சோனமுத்துவின் வீட்டிற்குள் மர்ம ஆசாமிகள் நுழைந்துள்ளனர்.
வீட்டில் மர்ம ஆசாமிகளின் நடமாட்டம் இருந்ததைக் கண்டு திடுக்கிட்டு எழுந்த அகிலா, பக்கத்து அறையைப் பார்த்துள்ளார். அப்போது உள்ளே வந்த மர்ம ஆசாமிகள், அகிலாவின் முகத்தில் துணியால் அழுத்தி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிச் செயினை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். பால் வாங்க எழுந்த குடும்பத்தினர், அகிலா மயக்கத்தில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.