பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ளது கீழப்புலியூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமாக அதே ஊரில் இரண்டு வீடுகள் உள்ளன. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டை தாழ்பாள் போட்டுவிட்டு சுப்பிரமணி உட்பட குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். காலை ஆறு மணிக்கு எழுந்து சுப்பிரமணி கதவைத் திறந்தபோது கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தனது தம்பி ராமலிங்கத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் வந்து இவரது வீட்டில் வெளிப்பக்கம் போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்துவிட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த சுப்பிரமணியன் தமக்கு பக்கத்தில் உள்ள தனது இன்னொரு மாடி வீட்டை சென்று பார்த்தார். அந்த வீடு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்தபோது அந்த வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 45 பவுன் நகை, 65 ஆயிரம் பணம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததும். இதையடுத்து சுப்பிரமணி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்பநாய் மற்றும் தடைய அறிவியல் துறையினருடன் வந்து விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டனர். கொள்ளை பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 45 பவுன் அறுபத்தைந்தாயிரம் ஆயிரம் பணம் ஒரே வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.