நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்தநிலையில் பா.ம.க உடன் அ.தி.மு.க மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. நேற்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பா.ம.க எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் சந்தித்து பேசி இருந்தனர். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று வெளியே கூறப்பட்டாலும், இருகட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று மட்டுமின்றி அண்மையாகவே இதுவரை நான்கு முறை எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க எம்.எல்.ஏ ஒருவர் சந்தித்துப் பேசி இருக்கிறார். அதற்கு முன்பாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க.வுடன் பா.ம.க கூட்டணி எனில் எட்டு மக்களவைத் தொகுதிகளை வழங்க வேண்டும் என பா.ம.க சார்பில் கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடலூர், சிதம்பரம், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட எட்டு தொகுதிகளை பா.ம.க கேட்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் பா.ஜ.க.வும் பா.ம.க.வை தங்களுடைய கூட்டணிக்குள் இழுக்க போட்டோ போட்டி நடத்தி வருகிறது. பாமகவிற்கு 12 தொகுதிகள், இரண்டு மாநிலங்களவை எம்பி, ஒரு அமைச்சர் பதவி தர பாஜக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பாமக நிர்வாகிகள், அதிமுக உடனே கூட்டணி வைக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.