ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடில்லாமல் சட்டவிரோத பேனர்கள் ஏன் அனுமதிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றியதாகவும், ஆனால் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டதை காவல்துறையோ, மாநகராட்சியோ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதற்கு காரணமான எழும்பூர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, பேனர்கள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையர் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டும், காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என நீதிபதி தெரிவித்தார். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற எவ்வித பாரபட்சமும் இல்லாமல் பேனர்களும் அனுமதிக்கப்படுவதாகவும் நீதிபதி குற்றம் சாட்டியுள்ளார். டிராபிக் ராமசாமி போன்றவர்கள் தங்களுக்காக போராடவில்லை என்றும் நீதிபதி விளக்கினார். விதிமீறல் பேனர் பொதுமக்கள் மீது விழுந்தால் பாதிக்கப்படுவது யார் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.