Skip to main content

“மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இந்த நடவடிக்கைகள்” - சென்னை மாநகராட்சி

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

These measures are to follow the rules of public safety

 

இந்தியா முழுவதும் கரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் நோயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள், ஊரடங்கு என நடைமுறையில் இருந்தாலும் மக்களின் அசாதரண போக்கு கரோனா பரவல் அதிகரிக்க காரணமாக உள்ளது.

 

இதனைக் கருத்தில் கொண்டு பல மாவட்டங்களிலும் விதிகளை மீறுவோர்க்கு அபராதம் வசூலிக்கும் முறை நகராட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தக் கரோனா சூழலில் சென்னை மாநகராட்சி சார்பில் அபராதம் வசூலிக்கப்பட்ட விபரங்களை வெளியிட்டுள்ளது மாநகராட்சி இயக்குனரகம். அதன்படி சென்னை பெருநகர, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர் இடைவெளியுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், அவ்வப்போது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் வாயிலில் கிருமிநாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

 

அதேபோல் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களிடமிருந்து 22.04.2021 அன்று வரை மொத்தம் 4.12 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்