'கைது செய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்தி நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டுமே தவிர காவல் அதிகாரிகளே நல்லவர்கள், கெட்டவர்கள் என சொல்லி சுடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அரசியலில் தொடர்புடையவர்கள் கொலையில் இருக்கிறார்கள் என்பதை விட ரவுடிகள் பலர் அரசியலுக்கு வந்து விட்டார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. ரவுடிகள் நிறைய பேர் கட்சிகளில் தஞ்சமடைந்துள்ளார்கள். நடக்கும் கொலைகள் எல்லாம் அரசியல் பின்னணி கொண்ட கொலைகள் கிடையாது. சில கொலைகள் பகையால் ஏற்படும் கொலைகள். பாஜகவில் 270 ரவுடிகள் சேர்ந்துள்ளார்கள் என லிஸ்ட்டே சொல்கிறார்கள். இதற்கு காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
77 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளதாக சொல்கிறார்கள். முன்னாடியே இந்த லிஸ்ட் கையில் இருந்தது என்றால் ஏன் முன்னாடியே கைது செய்யப்படவில்லை. இப்பொழுது ஏன் நடவடிக்கை எடுக்கிறார்கள்? ஆனால் என்கவுண்டரை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காவல்துறை கைது செய்ய வேண்டும். கைது செய்து சட்டத்திற்கு முன்பு நிறுத்தி நீதிமன்றம் தான் தண்டனை கொடுக்க வேண்டுமே தவிர காவல் அதிகாரிகளே நல்லவர்கள் கெட்டவர்கள் என சொல்லி சுடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் பல சந்தேகங்கள் கேள்விகள் வருகிறது. சுடப்படுபவர்கள் எல்லாமே சாதாரண சமுதாயத்தை சேர்ந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். பல உண்மைகள் வெளியே வராமல் இருப்பதற்காக என்கவுண்டர் நடக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று சொல்லிவிட முடியாது. முன்பகையாகக் கூட இருக்கலாம். அவருடைய பின்னணியின் காரணமாகக் கூட இருக்கலாம். இதில் இரண்டு வகையாக பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று திடீரென்று சாலையில் செல்லும் இருவருக்குள் சண்டை வந்தது ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டார்கள் என்றால் அதைப் போலீசார் தடுக்க முடியாது. ஆனால் கூலிப்படை கொலையைப் போலீசார் தடுக்க முடியும்'' என்றார்.