இன்று 'நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், ''அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு அதேநேரம் உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வு என்ற வகையில், கடந்த மூன்று நாட்களாக இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டது என்னவோ 15 நாட்கள் முப்பது மணி நேரம். நடந்து எல்லா மக்களையும் சந்தித்து விடலாம் என்று எண்ணினோம். ஆனால் திட்டமிடப்பட்ட காலத்தில் எல்லோரையும் சந்திப்பது கஷ்டமாக இருக்கும் என்று கருதுகிறோம். போகின்ற இடங்களில் எல்லாம் மக்களுடன் பேசி அவர்களுடைய குறைகளை கேட்பது என்கின்ற வகையில் நேரம் எடுத்துக் கொண்டிருப்பதால் நிச்சயம் ஒரு 20 நாட்கள் 50 மணி நேரம் ஆகும் என்று கருதுகிறோம். ஆனாலும் சைதாப்பேட்டையை சுற்றி ஒரு 20 நாட்கள் 50 மணி நேரம் வீடு வீடாக வந்து உங்களுடைய குறைகளை கேட்க இருக்கிறோம்.
இப்பொழுது மூன்று நாட்கள் முடிவுற்றிருக்கிறது. தீபாவளி கழித்து மீண்டும் 27ஆம் தேதி 'நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க' நிகழ்வு தொடங்குகிறது. எனவே அந்த நிகழ்ச்சியிலும் ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் மனுக்களை அங்கே தரலாம். தாராள குணம் கொண்ட நமது மாவட்ட ஆட்சித் தலைவர் நிச்சயம் அனைவருக்கும் அதை ஆணையாக போட்டு தருவார் என்ற நம்பிக்கை மற்றும் உறுதியை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பேருக்கு தெரியும் ஓய்வூதியம் என்றால் அது ஆதரவற்றவர்களுக்கு ஓய்வூதியம் என்று மட்டும் தான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். விதவை தாய்மார்களுக்கும் ஓய்வூதியம் தரப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கும் உதவிதொகை கொடுக்கப்படுகிறது. இதில் கணவனால் கைவிடப்பட்டவர்கள் என சிலர் அரசாங்கத்தை ஏமாற்றும் முயற்சியை நிறைய பேர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு சுவையான சம்பவத்தை சொல்ல வேண்டும் வட்டாட்சியராக இருந்தவர் மணிகண்டன். அவர் தற்போது இல்லை. வட்டாட்சியர் மணியிடம் கணவனால் கைவிடப்பட்டவர் என மனு வருகிறது. அவர் அந்த அம்மாவை கூப்பிட்டு விசாரிக்கிறார். 'என்னமா சின்ன வயசா இருக்கு 35, 40 வயசு தான் இருக்கும் உங்களுக்கு. கணவனால் கைவிடப்பட்டவர் என்று மனு கொடுத்துள்ளீர்களே' என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த அம்மா 'தாசில்தார் ஆபிசில் பணம் கொடுக்கிறார்கள் என்று சொன்னார்கள் அதனால் மனு போட்டுள்ளேன்' என்றார். 'உங்கள் வீட்டுக்காரர் என்னமா பண்றாரு' என்றதற்கு 'அதுவா வேலை பார்க்கிறது' என்றுள்ளார் அந்த அம்மா. 'சரி இப்ப எங்கம்மா உங்க வீட்டுக்காரர் இருக்காரு' என கேட்டதற்கு 'வீட்டில் தூங்குகிறார்' என்றுள்ளார். 'யார் வீட்டில் தூங்குகிறார்' என்ற கேள்விக்கு 'ம்ம் எங்க வீட்டில் தான் தூங்குகிறார்' என்று சொல்லி இருக்கிறார். இந்த மாதிரியும் இருக்கக் கூடாது. அரசாங்கத்தின் உதவித்தொகையை பெறுகிறோம் என்றால் உரியவர்களுக்கு அரசின் பணம் போய் சேர வேண்டும். அந்த வகையில் அந்தத் திட்டம் பயன்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்'' என்றார்.