பத்திரப்பதிவில் நேரடி முறையையும் பின்பற்ற உத்தரவிடவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த எம். சின்னராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் ‘தமிழக பத்திரப்பதிவுத்துறை ஏற்கனவே ஆன்லைன் வாயிலாகவும் அதுபோல நேரடியாகவும் பத்திரங்களைப் பதிவு செய்து வந்தது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைனில் மட்டுமே பத்திரப்பதிவு நடைபெற வேண்டுமென்று உத்தரவிட்டது. ஆன்லைன் பத்திரப்பதிவு செய்வதற்குப் போதுமான மென்பொருள்கள் பத்திரப்பதிவுதுறையிடம் இல்லை. பத்திரப்பதிவுத்துறை ஊழியர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படவில்லை.
மேலும், ஆன்லைன் பத்திரப்பதிவில் ஆவணங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் மதிப்புமிக்க ஆவணங்கள் தவறாகக் கையாளப்பட வாய்ப்பு உள்ளது. ஆவணங்கள் தவறுதலாகக் கையாளப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பது நிர்ணயிக்கப்படவில்லை. ஆன் லைன் பதிவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை மேம்படுத்தும்வரை, நேரடியாக பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று நிர்பந்தம்செய்யக் கூடாது.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பத்திரப்பதிவுத்துறை இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளனர்.