![thenkasi police arrested two who made trouble to youngsters](http://image.nakkheeran.in/cdn/farfuture/3AcVxWCABDEJvF-czqSIA4nl7I6qzYdq6gv3RqGKbQg/1704517209/sites/default/files/inline-images/th-4_323.jpg)
இளம் காதலர்கள் மிரட்டப்பட்டு விபரீதமானதையடுத்து பதற்றத்திலிருக்கிறது தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் ஏரியா. ஆலங்குளம் நகரைச் சேர்ந்த கண்ணனும் (23) அதே மாவட்டத்தின் வல்லராமபுரத்தைச் சேர்ந்த செல்வியும்(19) ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். (மைனர்கள் என்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வெவ்வேறு வருடப் படிப்பிலிருப்பவர்கள் என்பதால் இருவருக்கும் நட்பாகி, பழக்கமாகி பின் காதலர்களாகியிருக்கிறார்கள். கல்லூரி முடிந்ததும் காதலர்கள் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்த பின் கண்ணன், செல்வியை தனது பைக்கிலேயே அவரது கிராமமான வல்லராமபுரத்திலிருக்கும் அப்பெண்ணின் வீட்டில் கொண்டு போய் விடுவதை வழக்கமாய் கொண்டிருக்கிறார்.
இந்தப் பழக்கம் தொடர்ந்து நடக்கவே இவர்களின் போக்குமாக்குகளை நான்கு கண்கள் அடிக்கடி நோட்டமிட்டுள்ளன. சில்வண்டுகளான (இளந்தாரிகள்) அவர்கள் இருவரும் தங்களின் மாஸ்டர் பிளான்படி கடந்த டிசம்பர் 28 அன்று இரவு வழக்கம் போல் காதலி செல்வியை அவரின் வீட்டில் விடுவதற்காக கண்ணன் பைக்கில் கூட்டி வந்தபோது மிகச் சரியாக, இரவு கிராமச் சாலையின் காட்டுப் பகுதியில் இவர்களை மடக்கிய அந்த இரண்டு சில்வண்டுகளும், டாய் யாரு. இந்த நேரத்தில் ரெண்டு பேரும் தனியா பைக்கில என்ன ரொமான்சா என மிரட்ட, காதலர்கள் இருவருக்கும் கை கால்கள் உதறலெடுத்திருக்கிறது. அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் இவர்களின் காதல் அவரவர்களின் பெற்றோர்களின் காது வரை போனதில்லையாம்.
![thenkasi police arrested two who made trouble to youngsters](http://image.nakkheeran.in/cdn/farfuture/7HlMwcoEZ-XG0H8QQnxAf0oiVMltASSSHt06NFqaR6E/1704517222/sites/default/files/inline-images/th-2_1740.jpg)
மடக்கிய சில்வண்டுகளில் ஒருவன் கண்ணனிடமிருந்த 6500 ரூபாயைப் பறித்தவன், செல்வியின் 2 கிராம் செயின் மற்றும் வெள்ளியையும் பிடித்திழுத்துப் பறித்திருக்கிறார்கள். இறுதியாக கண்ணனின் செல்லைப் பறித்தவர்கள், அதிலிருந்த செல்வியின் படத்தை அவளிடமே காட்டி, நா கூப்டும் போதெல்லாம் வரணும். இல்ல உன் படத்த கன்னா பின்னமாக்கி பரப்பிடுவேன்டி. நீ யாரு கூடேயும் வாழ முடியாதபடி ஆக்கிறுவேம்டி என்று மிரட்டி அனுப்பியிருக்கிறார்களாம். இதனால் பதற்றத்தோடு காதலர்கள் வீடு திரும்பியிருக்கிறார்கள்.
அதன்பிறகே செல்லைப் பிடுங்கிய சில்வண்டுகள் செல்வியைத் தொடர்ந்து பாலியல் இச்சைக்காக மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயத்திலிருந்த செல்விக்கோ மனமும், உடலும் உதறலெடுத்திருக்கிறது. இதற்கிடையே செல்வியின் பெற்றோர் செயின் பற்றி அவரிடம் கேட்டதில், அது தொலைந்துவிட்டதாகச் சொல்லி சமாளித்திருக்கிறார். இந்தச் சூழலில் அந்த இரண்டு சில்வண்டுகளின் மிரட்டல்கள் சற்று ஓவராக, பீதியில் மிரண்டு போன செல்வி சில நாட்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சத்தம் கேட்ட அவரின் பெற்றோர் அவர் துடிப்பதையறிந்து செல்வியை தாமதமில்லாமல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். அங்கே தீவிர சிகிச்சைக்குப் பின்பு செல்வி காப்பாற்றப்பட்டிருக்கிறார். அதன் பின் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார்கள்.
![thenkasi police arrested two who made trouble to youngsters](http://image.nakkheeran.in/cdn/farfuture/Mp-Sw8ZM_iNq6WUsWSa3BBFQ0YHPmdCe1SwFoKFWx3Y/1704517237/sites/default/files/inline-images/th-3_651.jpg)
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொள்ளையடித்து பின் பாலியல் மிரட்டல் விடுத்த சில்வண்டுகளான அந்த இரண்டு பேரையும் சேர்ந்தமரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா அள்ளிக்கொண்டு வந்து விசாரித்ததில் அவர்கள் கே.வி. ஆலங்குளம் கிராமத்தின் சிவசுப்பிரமணியன் மற்றும் வல்லராமபுரத்தின் கவியரசன் என்கிற இரண்டு இளைஞர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை ரிமாண்ட் செய்திருக்கிறோம் என்கிறார் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜா.
![thenkasi police arrested two who made trouble to youngsters](http://image.nakkheeran.in/cdn/farfuture/K0O-dX3fg9webjeBtNpIT069i-r_qFSU_JlxUk2Hwu0/1704517253/sites/default/files/inline-images/th-1_4498.jpg)
நாம் இது குறித்து அரசு மருத்துவமனையில் விசாரித்தபோது, பிடிபட்டவர்களில் ஒருவரான கவியரசன் ஒரு சைக்கோ என்பதை பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக சொன்னார்கள். கொள்ளை, பாலியல் மிரட்டல்கள் போன்றவைகளுக்காக ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இரண்டு இளைஞர்களும்.