நாகை அருகே கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கை வரிசை காட்டியுள்ளனர். வலிவலம் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள சாட்டியக்குடியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வேதபுரீஸ்வரசுவாமி கோவில் உள்ளது. ஈரடுக்கு பாதுகாப்பு சுவர் கொண்ட இக்கோவிலினை பணியாளர்கள் வழக்கம் போல நேற்றிரவு பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்தநிலையில், இன்று காலை வழக்கம்போல கோவில் நடை திறக்கப்பட்ட போது கோவிலின் முகப்பு பகுதி பூட்டி இருந்தது. அதேநேரம் கோவிலின் மூலவர் பகுதிக்குச் செல்லும் இரண்டு கதவுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது கோவிலிலுள்ள பித்தளை குடம்-4, பித்தளை சொம்பு -3, தொங்கும் விளக்கு-5, கை மணி-2, அரை அடுக்கு பித்தளை-1, பெரிய குத்துவிளக்கு-1, பித்தளை பூட்டு-3 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி தெரியவந்துள்ளது.
கோவிலின் முகப்பு கதவு பூட்டி இருந்த நிலையில் மதில் சுவர் ஏறி மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றுள்ளதாக வலிவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்த வலிவலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாகை கைரேகை நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் கோவில் ஆலயத்தின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள நிலையில், நேற்று இரவு மீண்டும் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.