டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை 10 முதல் 80 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குவாட்டருக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு 20 ரூபாயும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 20 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு 40 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஃபுல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 40 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு 80 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பீர் வகைகளுக்கு பத்து ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் தினமும் மதுவகைகளால் 10.35 கோடி ரூபாயும், பீர் வகைகளால் 1.76 கோடி ரூபாயும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 4,396 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விலை உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.
விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் கருத்து தெரிவித்திருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின், ஆவினின் நெய் முதல் தயிர் வரை விலை உயர்த்தப்பட்டது. தற்போது, டாஸ்மாக் (நமது மதுபான விற்பனை நிலையங்கள்) குவார்ட்டர் பாட்டில் முதல் பீர் வரை விலை உயர்ந்துள்ளது. உறுதியளித்தபடியே இறுதியாக தமிழகத்தில் ‘விடியல் ஆட்சியை திமுக கொண்டுவந்துவிட்டது போல" என்று கூறியிருந்தார். இந்நிலையில், டாஸ்மாக் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்திருந்த அண்ணாமலைக்கு தமிழ்நாடு மது குடிப்போர் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், " மதுபான விலை உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி, நன்றி, நன்றி" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.