தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுகவுக்கு உள்ள 3 இடத்தில் ஒரு இடம் பாமகவுக்கு தரப்பட்டது. மீதியுள்ள 2 இடத்தை கேட்டு தம்பிதுரை, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, சிவபதி மற்றும் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்பிக்கள் அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்பட 40 பேர் போட்டி போட்டு இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் முன்னாள் அமைச்சர் முகமதுஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தம்பிதுரைக்கு எப்படியும் எம்பி சீட் வழங்கி விடுவார்கள். முதல்வர், நம்முடைய ஆள் ஒருவர் டெல்லியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் அவருக்கு சீட்டு கிடைக்கும் என்றார்கள். ஆனால் அவருக்கு எம்பி சீட் மறுக்கப்பட்டுள்ளது.
தம்பிதுரை அதிமுக கட்சியில் மிக முக்கியமான சீனியர். இந்திய முழுவதும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவர். ஜெ. மறைவுக்கு பிறகு சசிகலாவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டவர். அதிமுகவில் தனக்கு எப்படியும் முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். பிஜேபி தான் எல்லாமும் என்று தெரிந்த பிறகு அவர்களிடம் கட்சியில் முக்கிய பதவி கொடுக்க வேண்டும் போராடினார். கடைசியில் எதவும் கிடைக்காது என்று தெரிந்தவுடன் பிஜேபி எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தார்.
எம்.பி. தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் தம்பிதுரை. பாஜவை தோளில் சுமக்க நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்று கேட்டார். இதனால் தம்பிதுரை மீது டெல்லி பாஜ தலைவர்கள் கோபத்தில் இருந்தனர்.
இதனை அறிந்த தம்பிதுரை தனக்கு எம்.பி. தேர்தலில் சீட்டு வேண்டாம். மாநிலங்களவையில் சீட்டு கொடுங்கள் என்று தலைமையுடன் கேட்டுக்கொண்டார். ஆனால் எடப்பாடியும், ஓ.பி.எஸ். இருவரும் இணைந்து நீங்கள் கட்சியின் சீனியர் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு நீங்கள் தேர்தலில் நின்றே ஜெயித்து விடலாம். தற்போது ஜெயிக்கிற கூட்டணி ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் பார்த்துக்கொள்ளலாம் என்று மனசை மாற்றி கரூர் தொகுதிக்கு தம்பிதுரையை ஒதுக்கினார்கள். தம்பிதுரையும் வேறு வழியில்லாம் தேர்தலில் நின்றார்.
ஆனால் தம்பிதுரைக்கு கட்சியினர் யாரும் வேலை செய்யவில்லை. இதனால் கரூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். இதன்பின், முக்கிய கூட்டம், நிகழ்ச்சிகளுக்கு கூட அவரை அதிமுகவினர் அழைப்பதில்லை என்று சொன்னாலும் திட்டமிட்டு தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வேறு கட்சிக்கு தாவ போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்.
ஆனால் கூட்டணி விவகாரத்தில் பாஜவையும், மத்திய அரசையும் விமர்சித்த தம்பிதுரைக்கு எம்பி சீட் கொடுக்க கூடாது என பாஜ மேலிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு போட்டு விட்டது. தம்பிதுரைக்கு எம்பி சீட் கொடுக்க நினைத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின் வாங்கி விட்டார். தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டு அதிமுக ஆட்சி உள்ளது. அதை காப்பாற்ற வேண்டும் என்றால் டெல்லி தலைவர்களின் தயவு தேவை. இதனால்தான் தம்பிதுரைக்கு சீட்டு கொடுக்க கூடாது என்று இருந்த எடப்பாடி கவனமாக பழியை டெல்லிமீது போட்டார்.
தனக்கு இனி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பில்லை. அதனால் எப்படியும் ராஜ்யசபா சீட்டு வாங்கிடலாம் என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்த தம்பிதுரையும் கனவை முதல்வர் எடப்பாடி கவனமாக கையாண்டு அவருடைய கனவை தகர்த்தார் என்கிறார்கள் அதிமுக முக்கிய புள்ளிகள் !