ஈரோடு மாவட்டத்தில் முக்கிய தொழிலாக ஜவுளி இருந்துவருகிறது. இதை நம்பித்தான் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபகாலமாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனால், ஜவுளி தொழிலை நம்பியுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். தொடரும் நூல் விலை உயர்வைக் கண்டித்து இன்று (06.01.2021) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஈரோடு ஜவுளி வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்கத்தினர் கூறும்போது, “கடந்த பல மாதங்களாகவே உற்பத்தி செய்யப்படுகிற பஞ்சு விலை அதிகபட்சமாக பத்து சதவீதம்கூட உயரவில்லை. ஆனால், நூல் விலையானது 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதுவும் நாளுக்கு நாள் விலை உயர்கிறது. நூல் விலைக்கு ஏற்ப துணி விலையை உடனே உயர்த்தி விற்க முடியவில்லை. 40ஆம் நம்பர் வார்ப் நூல் ஒரு கோன் கடந்த மாதம் ரூ.195 ஆக இருந்தது. தற்போது ரூ.235 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட ரக நூல் அதிகமாக உற்பத்தி செய்வதுடன், அவற்றை அதிகமாக ஏற்றுமதியும் செய்கின்றனர். பிற ரக நூலை தேவைக்குக் குறைவாக உற்பத்தி செய்து செயற்கையான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நூல் விலை உயர்த்தப்பட வேண்டும்.
இதை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்று (06.01.2021) ஈரோடு மாவட்டம் ஜவுளி விற்பனை நிறுவனங்கள், கடைகள், குடோன்கள் போன்றவை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். மாவட்ட அளவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும்” என்றனர்.