Published on 28/04/2020 | Edited on 28/04/2020
![Vellore young girl - corona virus](http://image.nakkheeran.in/cdn/farfuture/4CL1mlXayn9hgGb0lyE2gCxsv4iAqQLXgKUzHa1IMVw/1588086154/sites/default/files/inline-images/111111_323.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். தேங்காய் உரிக்கும் தொழிலாளி, இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் பிள்ளை உள்ளார்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாராப்பட்டு கிராமத்திற்கு ஏப்ரல் 26 ந்தேதி காலை ராஜ்குமாரி இருசக்கர வாகனத்தில் தனது உறவினர் வீடிற்கு வந்துள்ளார். இரவு அங்கேயே தங்கியுள்ளார். இரவு முழுவதும் தூங்கவில்லையாம். ஏப்ரல் 27 ந்தேதி காலை தன்னை ஒரு கோயிலுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டாராம். பின்னர் திடீரென வீட்டில் உள்ளவர்களுக்கு வாக்கு கூறியபடி வீட்டை விட்டு வெளியேறி ஆம்பூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் ஓம் சக்தி பராசக்தி என சொல்லியபடி தனியாக நடந்தே வந்தார். அப்போது பெரியாங்குப்பம் என்ற இடத்தில் சாலையோரம் இருந்த வேப்பமரத்தடியில் நின்றார். அப்போது அப்பகுதிமக்கள் அந்த பெண்ணிடம் வாக்கு கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், இந்த நகராட்சி மக்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது. கரோனா வைரஸ் நோய் உலகத்தை விட்டு போக 7 மாதம் ஆகும். ஏழு மாதத்திற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாது, நாட்டில் தீமை செயல்கள் அதிகமாகி உள்ளது. மக்கள் திருந்தவே இந்த நோய் நாடகம். உலகம் முழுவதும் ஏழு மாதங்களும் கடும் சோதனை துன்பங்கள் நடக்கும். இதுவே என் பரம்பொருள் ஈசனின் கட்டளை என்று கூறினார். அப்போது அந்த பகுதி மக்கள் பெண்ணின் கையில் கற்பூரம் ஏற்றினர். பின்னர் மஞ்சள் நீரை கையில் ஊற்றி குடிக்க வைத்த பின்னர் மயக்கம் அடைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது அந்த பெண்ணின் உறவினர்களால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்கிற கருத்தும் உலாவுகிறது .