விழுப்புரம் மாவட்டம், கடற்கரையோரப் பகுதியில் உள்ளது மரக்காணம். இந்தப் பகுதியில் உள்ள வண்டிப்பாளையம் - ஆத்திகுப்பம் இடையே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக கோட்டகுப்பம், தேவிகுளம், ஆத்திகுப்பம், நடுக்குப்பம், கொளப்பாக்கம், அடசல் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து செயல்பட்டு வந்தது.
தற்போது, மழைநீர் அதிகரித்து ஓடியதால் அந்தத் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பகுதி மக்கள் புதுச்சேரி, மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால் இந்த பக்கிங்காம் கால்வாயைக் கடந்துதான் செல்ல வேண்டும். தற்போது மழை காரணமாக அந்த கால்வாயில் போடப்பட்டிருந்த தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்களது போக்குவரத்து முடங்கிப் போயுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் உள்துறை இணைச் செயலாளர்கள் அஷ்டோஸ் அக்னி கோத்ரி ஆகியோர் தலைமையில் மத்திய குழுவினர் சேத விவரங்களை ஆய்வு செய்வதற்கு நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் களிஞ்சிகுப்பம், வீராணம், பாக்கம், கூட்ரோடு, கண்டமங்கலம் உட்பட்ட பகுதிகளில் புயல் மழை காரணமாகச் சேதமடைந்த கரும்பு, நெல், வாழை ஆகியவற்றைப் பார்வையிட்டதோடு அப்பகுதி விவசாயிகளையும் சந்தித்து விவரங்களைச் சேகரித்துள்ளனர்.
இவர்கள், விழுப்புரம் மாவட்ட பகுதிகளையும் புதுச்சேரிப் பகுதிகளையும் ஆய்வு செய்து முடிப்பதற்கு இரவு 7 மணி கடந்துவிட்டது. அடுத்து கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றனர். மத்திய குழுவினரோடு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். மழை தொடர்ந்து கொண்டே உள்ளது. மேலும் அடுத்தடுத்து இன்னும் சில காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி மழை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள், அரசு அதிகாரிகள், பொது நல இயக்கத்தினர் போன்றோர் புயல் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு உடை ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். மேலும் அந்தந்த கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.