தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் எம்.எல்.ஏ. ஆக திமுகவைச் சேர்ந்த கே.எஸ்.மூர்த்தி உள்ளார். இவர், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு காய்ச்சல், உடல்வலி இருந்து வந்தது. நேற்று முன்தினம் (15/04/2021) அவர் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
இதைத் தொடர்ந்து, உடனடியாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.