திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் கிராமத்தில் ப்ளூடூத் மூலம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர் மீது இடி மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். லால்குடி அருகே பல்லபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் 28 வயதான ஜெயக்குமார். இவர் லால்குடி அருகே குமுளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று மாலை முதல் லால்குடி பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில் வீட்டிலிருந்த ஜெயக்குமார் ப்ளூடூத் மூலம் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜெயக்குமார் மீது இடி மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் அங்கேயே மயங்கி விழுந்தார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் எனக் கூறினர்.
இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.