நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 23-ந் தேதி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களித்த பின்னர் நடிகர், நடிகைகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, நடிகர் சங்கத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றார் நடிகை குஷ்பு. நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என ராமராஜன் கூறினார். தேர்தலுக்கு பிறகு நடிகர் சங்கத்தில் அனைவரும் ஒன்றாக செயல்படுவார்கள் என்றார் சின்னி ஜெயந்த். நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றுவது குறித்து அனைத்து நடிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார் சூரி.
நடிகர் சங்க கட்டட பணிகள் முடிந்தால் மாதம் ரூ50 லட்சம் வருவாய் வரும். இந்தியாவிலேயே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கணக்கு வழக்குகள் தான் ஆன்லைனில் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் கொடுத்த பொறுப்பை சிறப்பாக செய்தோம் என கூறினார் கருணாஸ்.
எனது ஆதரவு பாண்டவர் அணிக்குதான் என்றார் சந்தானம். நடிகர் சங்கத்துக்கு மிகப்பெரிய நல்லது நடக்க போகிறது என ராம்கி கூறினார். நான் வாக்களித்த அணியே வெற்றி பெறும் என நடிகை சுஹாசினி கூறினார். எந்த அணி வெற்றி பெற்றாலும் விரைவாக சங்க கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று கஞ்சா கறுப்பு கூறினார்.
நடிகர் விஜயகுமார், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 'தமிழ்தாய் நடிகர் சங்கம்' என பெயர் வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இதனை அவர்கள் செயற்குழுவில் பேசி முடிவு எடுக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
நடிகர் விவேக் பேசும்போது, கலைஞன் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவன்தான். அவர்கள் தாய் மொழியில்தான் நடிக்க வேண்டும் என்பது கிடையாது. 'தமிழ்தாய் நடிகர் சங்கம்' என வைத்தால் கூட சந்தோஷம்தான் என்றார்.
பெரும்பாண்மையானோர் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்யலாம். மாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்குமெனில் பெயரை மாற்றலாம் என்றார் கமல்.
இந்த சங்கத்தில் நடிகர் ராஜ்குமார் இருந்தார், நடிகர் நாகேஸ்வரராவ், என்.டி.ஆர் என எல்லோரும் மெம்பராக இருந்தனர். நான்கு மொழி நடிகர்கள் இந்த சங்கத்தில் இருநதனர். அதையெல்லாம் நாம் மனதில் வைத்திருந்தோம் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கலாம் என நினைக்கிறேன் என்றார் பிரபு.