புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இருந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி போராட்டம் செய்தததோடு 2 ஆயிரம் பெண்கள் இரு கடைகளையும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடைத்தனர்.
அந்தப் போராட்டத்தின் போது, அப்போதைய ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சருமான மெய்யநாதன் பங்கேற்றிருந்தார். அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த கணேஷ், ‘இனிமேல் கொத்தமங்கலம் ஊராட்சி எல்லைக்குள் டாஸ்மாக கடைகள் திறப்பதில்லை’ என்று அறிவித்தார்.
ஆனால், ஐந்து வருடம் கழித்து நேற்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தலைமையில் தே.மு.தி.க. மா.செ மன்மதன், நாம் தமிழர் கட்சி, சி.பி.ஐ, பா.ஜ.க உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அமைச்சர் மெய்யநாதனுக்கும் தகவல் கொடுத்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். மேலும் கடையை மூடவில்லை என்றால் ஊரெங்கும் விளம்பரம் செய்து மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று கொத்தமங்கலத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவலையடுத்து கிராம இளைஞர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் மெய்யநாதனுக்கு நன்றி என்ற போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதே பகுதியில் கள்ளத்தனமாக ஆங்காங்கே விற்பனை செய்வதையும் அதே போல இளைஞர்கள் மாணவர்கள் மாற்றுப் போதைக்கு அடிமையாவதையும் போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் பெண்களும்.