ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் மத்திய அரசால் கொடுக்கப்பட்டது. இதில் கடந்த மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்தது. அரசு குறிப்பிட்டிருந்த ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளியில் நிற்க வேண்டும் என்பதனை பின்பற்றவில்லை எனவும், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கில், உடனடியாக டாஸ்டாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், மதுக்கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டோக்கன் முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்குச் சுமார் 70 பேர் வீதம் மது வாங்கிச்செல்லும் விதமாக, கடை ஒன்றுக்குத் தினமும் 500 பேருக்கு 500 டோக்கன் வழங்கி, கூட்ட நெரிசலைத் தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் யாராவது டோக்கன் வைத்திருந்தால், அவர்கள் மறுநாள் மது வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே, டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதிக்கவேண்டும். டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில் எந்த நேரமும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவு வரும் என்று தமிழக அரசின் டாஸ்மாக் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று இரவோடு இரவாக ஒவ்வொரு கடையின் மேற்பார்வையாளர்களுக்கு 500 டோக்கன்களைக் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த டோக்கன்களை வாங்க மதுப்பிரியர்கள் பலர் ஆளும் கட்சியின் சிபாரிசோடு காத்திருக்கிறார்களாம். இதேபோல் டாஸ்டாக் கடைகள் திறக்கப்பட்டால் ஒரு கடைக்கு எத்தனை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும், யார் யார் பணியில் ஈடுபட வேண்டும் என்ற வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறதாம்.
-மகேஷ்