அரசுப் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், நாகை மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்களும், சுற்றுலாவாசிகளும் தடுமாறினர்.
ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப் பணபலன்களை வழங்க வேண்டும், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, நாகை மாவட்டத்தில் 350- க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட 11 பணிமனைகளில் உள்ள 521 பேருந்துகளில் 112 பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. நாகை மாவட்டத்தில் 50 பேருந்துகள், திருவாரூரில் 48 பேருந்துகள், மயிலாடுதுறையில் 14 பேருந்துகள் இயக்கப்பட்டன. நாகை பேருந்து நிலையத்தில் சொற்ப அளவிலான பேருந்துகள் இயங்கி வந்ததால், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுலா வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து கிடைக்காததால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் நாகை பேருந்து நிலையத்தில் சில தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்கியதால், உள்ளூரில் வேலைக்குச் செல்லக்கூடியவர்கள் தனியார் பேருந்துகளில் பயணித்தனர். அரசுப் பேருந்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பேருந்து நிலையம் பேருந்துகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.