தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (19/02/2022) காலை 07.00 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகின்றன. அத்துடன், வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களும் அனுப்பப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவை சிறப்பான முறையில் நடத்த தேவையான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. பதிவான வாக்குகள் எண்ணும் பணி வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று காலை 08.00 மணிக்கு தொடங்கும். அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ரத்தான, ஒத்திவைக்கப்பட்ட இடங்கள் எவை என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூராட்சி வார்டு 8- ல் யாரும் போட்டியிடவில்லை. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சியின் 12 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் 36 ஆவது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலையால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சியில் வேட்பாளர் ஐயப்பன் உயிரிழப்பால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி 9ஆவது வார்டு வேட்பாளர் அனுசுயா உயிரிழப்பால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.